கதையோடு பின்னியது நமது வாழ்க்கை. என் வாழ்க்கையே பெருங்கதை என்கிறீர்களா?. நிலாக்கதை கேட்டு சோறு சாப்பிட்டு வளராத குழந்தை தமிழ்நாட்டில் கிடையாது. இதுவரை கேட்காத கதையா கேட்டுவிடப்போகிறோம் என்று எண்ணலாம். கதையைப் படிக்க நெட்டிற்கு எல்லாம் வர வேண்டுமா
என்று கூடத் தோன்றலாம்.
சினிமாவுக்கு சென்று கதை திருப்தி என்றால்தானே மனது சாந்தி அடைகிறது. சில கதை நம் கதைபோல இருக்கிறது என்று பாராட்டத் தோன்றுகிறது.
காந்திஜியின் மனதை மாற்றியதும் ஒரு கதைதான். விடுதலைக்கு வித்திட்டது பல போராட்ட வீரர்களின் புரட்சி உணர்வில் உதித்த உன்னதக் கதைகள்தான் இல்லையா?
இங்கும் நமக்கு பாடம் சொல்கிறது ஒரு கதை…
ஒரு செல்வந்தர் மரணப் போராட்டத்தில் காலம் கடத்தி வந்தார். அவர் தன் நண்பரிடம் தனது செல்வங்களை ஒப்படைத்து ‘என் மகன் வளர்ந்ததும் நீ விரும்பிய செல்வங்களை அவனுக்கு கொடுத்துவிட்டு மற்ற செல்வங்களை நீயே அனுபவித்தக்கொள் நண்பனே!’ என்று கூறிவிட்டு இறந்துவிட்டார்.
காலம் உருண்டோட நண்பரின் மகன் இளைஞன் ஆனான். தந்தையின் வாக்கு பற்றி கேள்விப்பட்ட அவன் தந்தையின் நண்பரிடம் சென்று செல்வங்களை தனக்குத் தருமாறு கேட்டான். அப்போது அந்த நண்பர், உன் தந்தை ஆயிரம் பொன் தந்தார். நான் விரும்பும் செல்வத்தை உன்னிடம் வழங்கலாம் என்று கூறி இருக்கிறார், இதோ நான் விரும்பும் 100 பொன்களை நீ எடுத்துக் கொண்டு செல் என்று கூறினார்.
இதைக் கேட்ட இளைஞன் திகைத்துப்போனான். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான். நீதி வேண்டி கூர்மதி கொண்ட நீதிபதி மரியாதை ராமனை நாடினான். நீதிபதி வழக்கை நன்கு விசாரித்தார்.
பிறகு அந்த இளைஞரின் தந்தையின் நண்பரிடம் வினா தொடுத்தார்.
‘நீர் எவ்வளவு பொன்னை இவனுக்கு கொடுக்க விரும்புகிறீர்” என்றார்
‘100 பொன்’ என்று பதில் வந்தது.
‘சரி நீங்கள் வைத்துக் கொள்ள விரும்புவது எவ்வளவு பொன்’ என்றார் நீதிபதி.
‘900 பொன்’
‘சரி அப்படியானால் நீர் விரும்பும் பொன் எவ்வளவு?’ என்றார் நீதிபதி
சிக்கிக் கொண்ட அந்த நபர் ‘900 பொன்’ என்று பதில் சொன்னார்.
‘அப்படியானால் நீர் விரும்பும் 900 பொன்னை அந்த இளைஞருக்கு வழங்கும்’ என்று தீர்ப்பு கூறினார் நீதிபதி.
கதை சொல்லும் பாடம் என்ன? பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

0 comments:
Post a Comment